Saturday, November 29, 2008

mumbai

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்
[சனிக்கிழமை, 29 நவம்பர் 2008, 05:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்குழுக்களுடன் போராடுவது தான் சிறந்தது. தற்போது மும்பாயில் உள்ள தாஜ்மகால் மற்றும் ஒபரோய் ஆடம்பர விடுதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் இந்தியாவுக்கு சரியான பாடம் என தனது உள்ளக்கிடக்கையை கொட்டியுள்ளது. சிறிலங்கா பாகிஸ்தானின் தீவிர விசுவாசி. அது எப்போதும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட வரலாறு கிடையாது. பங்களாதேசத்தின் மீதான போரின் போதும் அது பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது.
எனவே, மும்பாய் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சுமத்தி வருகையில் பாகிஸ்தானின் தீவிர விசுவாசிகளான சிங்கள மக்களின் பத்திரிகை ஒன்று மகிழ்ச்சி தெரிவிப்பது வியப்புக்குரியது அல்ல என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments: