Saturday, February 28, 2009

சிங்களனுக்கு ஆயுதம் வழங்க - தமிழன் பணமா?
வருமான வரி அலுவலகங்களை இழுத்து மூடு!
ரசாயனக் குண்டுகளும் அழுகிய முட்டைகளும்

பார்ப்பான் கொலை செய்தால் - அவன் முடியை வெட்டினால் போதும்; சூத்திரன் கொலை செய்தால் - அவன் தலையை வெட்ட வேண்டும் என்று கூறுகிறது ‘மனு நீதி’. அந்த மனுநீதி இப்போதும் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சுப்ரமணிய சாமி சம்பவமே சான்று.
சில அழுகிய முட்டைகள் நீதிமன்றத்தில் அந்தப் பார்ப்பனர் மீது வீசப்பட்டதால் நாடே அலறுகிறது. பூகம்பம் நிகழ்ந்து விட்டதைப் போல் பார்ப்பன ஏடுகள் பதறுகின்றன. ‘இந்து’ பார்ப்பன ஏடு ஆசிரியருக்கு கடிதங்களையும், முன்னாள் நீதிபதி கருத்துகளையும், பார்ப்பன சங்க கருத்தையும் கேட்டுப் பெற்று, 2 பக்கங்களை ஒரு தனி மனிதனுக்காக அவன் பார்ப்பான் என்பதற்காக ஒதுக்கி செய்திகளை வெளியிடுகிறது.
மிரண்டு போன தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி பெறாமலே நீதிமன்றத்துக் குள் காவல்துறையை முறைகேடாக நுழைத்து, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மண்டையை உடைக்கிறது. வழக்கறிஞர்கள் கார்களை காவல்துறையே உடைத்து நொறுக்குகிறது. இவ்வளவுக்கும் காரணம் சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பான் மீது விழுந்த நான்கு அழுகிய முட்டைகள் தான்.
தில்லை நடராசன் கோயிலை தீட்சதப் பார்ப்பனர் களின் சொத்தாகவே நீடிக்க வேண்டும் என்பதற்காக தீட்சதப் பார்ப்பனர்களுக்காக தமிழக அரசை எதிர்த்து, வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வந்தவர்தான் சுப்ரமணியசாமி. ஒவ்வொரு நாளும் முல்லைத் தீவில் போர் நிறுத்தப் பகுதியில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் சிங்கள ராணுவத்தின் ரசாயனக் குண்டுவீச்சால் பிணமாகி வரும் செய்திகள் வரும்போது இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் எதுவுமில்லை; அரசு பதற வில்லை; பார்ப்பன ஏடுகள் கொதிக்கவில்லை. கேவலம், நான்கு முட்டைகளின் சக்திக்கு முன் ராசயனக் குண்டுகள்கூட வலிமையிழந்து போய்விடுகின்றன.
காரணம், முட்டை விழுந்தது - ஒரு பார்ப்பான் மீது; அந்தப் பார்ப்பானுக்கு தமிழ்நாட்டில் அமைப்பு கிடையாது; ஆதரவு கிடையாது. ஆனால், அதிகாரம் - பார்ப்பன அதிகார மய்யம் சூழ்ந்து நிற்கிறது. இதுதான், இந்தியா! இதுதான் தமிழ்நாடு!
சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகளின் கோரிக்கை!
போரை நிறுத்தி ஈழத்தமிழினம் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முன் வருமாறு விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்துக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் எழுப்பியுள்ள அர்த்தமுள்ள - நியாயமான கருத்துகளை சர்வதேச சமூகம் செவி மடுக்க வேண்டும். அக்கடிதம் முன்வைத்துள்ள முக்கிய கருத்துகளை இவ்வாறு பட்டியலிடலாம்:
1) வடக்கு-கிழக்கு மாநிலங்களை தங்களது பாரம்பரியத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள் அவர்களுக்கான தாயகத்தை தேசிய சுயநிர்ணய உரிமையின் கீழ் அமைத்துக் கொள்ள உள்ள உரிமையை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு ராணுவத்தால் அடக்கி, மைனாரிட்டி மக்களான தமிழர்களை இனப் படுகொலை செய்து வருகிறது. இது அரசு பயங்கரவாதம்.
2) அமைதி வழியில் உரிமைக்குப் போராடிய தமிழர் களுக்கு எதிராக சிங்களக் குடியேற்றங்களைத் திணித்து, தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பு களைப் பறித்து, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியபோதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம் வரலாற்று ரீதியாக பிறப்பெடுத்தது.
3) வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் தாயகத்தை நிறுவும் அரசியல் ரீதியான முடிவுக்கு 1977 இல் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் கட்சி வழியாக ஏற்பு வழங்கினர். அந்த ஜனநாயக உரிமையை நிறைவேற்றும் தேசியக் கடமையை யாற்றவே விடுதலைப்புலிகள் முன் வந்தனர்.
4) அதனடிப்படையில் கடந்த 30 ஆண்டுகாலமாக விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் மகத்தான தியாகத்தால் தங்களது ராணுவ நடவடிக்கையால் உலகத்தின் பாராட்டுகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தனர்.
5) எப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக பலமாக விளங்கினார்களோ, அப்போ தெல்லாம் அரசியல் தீர்வுக்கு முன் வருவதாகக் கூறி, இலங்கை நாடகமாடி, தனது படை பலத்தை வலிமையாக்கி வந்துள்ளது. 1985 திம்புவில் தொடங்கி, 2002 இல் நார்வே நாட்டின் தலையீட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் உரு வாகும் வரை இந்த தந்திரத்தையே பின் பற்றினார்கள்.
6) நார்வே மற்றும் நிதி உதவி செய்யும் நாடுகளின் ஆதரவோடு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம், சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவும் கட்டமைப்பு, போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உடனடி புனர் வாழ்வுத் திட்டங்களை நிறை வேற்றும் செயலகங்கள் அமைப்பு என்ற இந்த மூன்று ஒப்பந்தங்களையும் செயல்பட முடியாமல், சீர்குலையச் செய்ததே இலங்கை அரசுதான்.
7) போரை கைவிட்டு, அமைதி பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண முன்வருமாறு சர்வதேச நாடுகள் விடுத்த கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தது - சிறீலங்கா தான். இது சர்வதேச நாடுகளுக்கே தெரியும். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் இலங்கை அரசு - ராணுவ தீர்வை மட்டுமே நம்பியிருப்பதை தொடர்ந்து மிகவும் சரியாக அம்பலப்படுத்தி வந்தது.
8) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறிலங்கா அரசியல் தீர்வு முயற்சிகளை கைவிட்டு, ராணுவத் தீர்வையே முன்னிறுத்தி யது. “பாதுகாப்பு காரணங்களுக்காக” என்று கூறிக் கொண்டு, மக்களுக்கு சேவை செய்த தொண்டு நிறுவனங்களையும், பத்திரிகையாளர் களையும் வெளியேற்றிய சிறீலங்கா அரசு, ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை துணி வோடு கண்டித்த தொண்டு நிறுவனத்தினரையும் பத்திரிகையாளர்களையும் ‘வெள்ளைப் புலிகள்’ என்று பழி போட்டது.
9) சிறீலங்கா அரசின் எல்லை மீறிய இந்த வன்முறைகளை பொறுமையுடன், சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் பதற்குக் காரணம், சிறீலங்காவுக்கு ‘அரசு’ என்ற அங்கீகாரம் இருப்பதால்தான். விடுதலைப் புலிகளின் நேர்மையான - நீதியான போராட்டத்தை சர்வதேசம் நிராகரிப்பதற்குக் காரணம் - ‘அரசு’ என்ற அங்கீகாரம் இல்லாமையே. ஹிட்லர் அரசு முதல் குவாண்டா அரசிலிருந்து சூடான் அரசு வரை, ஆட்சிகள்தான் இனப்படுகொலைகளை நடத்தின. 1956 இல் தொடங்கிய இந்த இனப் படுகொலை வரலாறு - இப்போது மேலும் விரிவடைந்து நிற்கிறது. 200,000-த்துக்கும் அதிகமான மக்கள் 1956 முதல் இனப்படு கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
10) தமிழர்களின் நியாயமான, தனித் தாயக உணர்வை ஆதரிக்கத் தயங்கும் சர்வதேச சமூகம், தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தமிழ் - சிங்கள மோதலுக்கு ஒரே நிலையான தீர்வு, தமிழர்களின் தாயகம் உருவாவதுதான். சிங்களப் படை மற்றும் சிங்கள அரசால் நீண்டகாலமாக படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்கள், விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். தங்கள் உடைமைகளை இழந்து சொல்ல முடியாத துயர நினைவுகளையும் சுமந்து நிற்கும் தமிழர்கள், அந்த நினைவுகளிலிருந்து விடுபடவே முடி யாது. இத்துயரம் தோய்ந்த நினைவுகளோடு, தமிழர்கள் சிங்களர்களோடு ஒன்றுபட்ட இலங்கையில் சமமாக வாழவே முடியாது. இதுவே இன அரசியல் ரீதியான உண்மை.
11) பல்குழல் பீரங்கி, ஏவுகணைகள் போன்ற அழிவு ஆயுதங்களால் நாள்தோறும் அப்பாவித் தமிழர்கள் -அவர்கள் இடம் பெயர்ந்த முகாம் களிலேயே, நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 2000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். 5000க்கும் அதிகமானோர் படுகாயமடைந் துள்ளனர். 21-ம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையை தமிழ் ஈழம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
12) இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை ஏற்று, போர் நிறுத்தத்துக்கு உண்மையான நோக்கத்தோடு தயாராகவே உள்ளது. மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர விரும்பு கிறது இந்த போர் நிறுத்தம் - சமரசப் பேச்சு வார்த்தையை நோக்கி முன்னேறவே விரும்புகிறோம்.
13) விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை - பிரச் சினையின் தீர்வுக்கு உதவாது என்பதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதம் தான் தமிழர்களின் பாதுகாப்பு கவசம். அதுவே தமிழர்கள் அரசியல் விடுதலைக்கான கருவி என்பதே அரசியல் எதார்த்தம். தமிழ் மக்களின் பாதுகாப்பு - விடுதலைப்புலிகளின் ஆயுதங் களைச் சார்ந்தே உள்ளது. சர்வதேச கமூகத்தின் ஆதரவுடன் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று உருவாகும்போது, விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கான அவசியமே நேராது. தமிழ் மக்கள் கொடூரமான இனப் படு கொலைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அரசியல் தீர்வு எதுவும் இல்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடுவது சாத்திய மில்லாதது. அதே நேரத்தில் அரசு நடத்தி வரும் இனப் படுகொலை யுத்தத்தை பாராட்டும் செயலாகவும் அது அமைந்து விடும்.
14) எனவே சர்வதேச சமூகம் இனப்படுகொலையை தடுத்திட போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டுகிறோம். இதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் உருவாக்கி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்யாவசியப் பொருட்களை கிடைத்திடச் செய்ய வேண்டுகிறோம்.
உடனடி போர் நிறுத்தம் கொண்டு வரும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, இணைந்து பணியாற்றிடவும், அந்த போர் நிறுத்தம் அரசியல் தீர்வை நோக்கி முன்னேறவும் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் - என்று விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத் துள்ளது.
இந்தியாவின் காதுகளில் இந்த நியாயங்களின் குரல் கேட்கமா? ட
‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன?
ஈழத்தில் - சிங்கள ராணுவம்தான் இந்தியாவின் பேருதவியோடு போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட் டோம் என்கிறது சிங்களம். புலிகள் ராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க.வும் ஏற்று ‘இருதரப்பு போர் நிறுத்தம்’ என்ற கருத்தை முன் வைத்து மனித சங்கிலியை நடத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாலும் காங்கிர° கூட்டணியில் இருப்பதாலும் ஈழத் தமிழின உரிமைப் போராட்டத்தை நசுக்கிடும் இந்திய அரசை எதிர்க்காமல் சமரசம் செய்து கொள்ளத் துடிக்கிறது. ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று முதல்வர் அறிக்கைகளை விடுகிறார். இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்த வில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். தாங்கள், இப்பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்றார். தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்றார். தமிழக இளைஞர்களும் ஆயுதம் ஏந்திப் போராடும் காலம் வரும் என்றார். அதே கருத்தினை இப்போது சீமான் பேசினால், மற்றவர்கள் பேசினால், ஒருமைபாட்டுக்கு எதிராக பேசியதாக வழக்குப் போட்டு அதே கலைஞர் சிறையில் தள்ளுகிறார். ஆனால், அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியோ, இத்தகைய நடவடிக்கைகளை கலைஞர் எடுத்ததில்லை என்பதே உண்மை. கடந்த காலங்களில் கலைஞர் எதிர்கட்சியாக இருந்தபோது மக்களிடம் பேசிய கருத்துகளையே இப்போது தமிழின உணர்வாளர்கள் பேசினால் - கலைஞர் ஆட்சியில் சட்டம் பாய்கிறது. இப்போது மூன்றாவது முறையாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அன்று கலைஞர் பேசிய “வீர முழக்கத்தில்” கால்பங்கைக் கூட பேசிடாத சீமான் - இப்போது சிறையில்!
இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் அந்த உரைகளை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஈழத் தமிழர் களுக்காக தமது கடந்தகால தியாகங்களை கலைஞர் பட்டிய லிடும்போது நாம் அவரது கடந்த கால உரைகளையும் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
1985 அக்டோபர் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து தி.மு.க. தலைமையகமே ஒரு நூலை 1985 ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’ எனும் தலைப்பில் தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் மறைந்த சி.டி.தண்டபாடி முன்னுரையோடு வெளி யிடப்பட்ட அந்த சிறு வெளியீட்டிலிருந்து கலைஞர் உரையின் சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்:
தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு குற்றமென்ன?
மொராக்கோ நாட்டில் நடை பெறும் கொரில்லாப் போராட்டத்திற்கு இந்திய அரசு அங்கீகாரம் அளித்திருக் கிறது. இதனால் மொராக்கோ கோபம் கொண்டு இந்திய அரசுடன் தனது உறவுகளை துண்டித்துக் கொண்டது.
அதேபோல பால°தீன விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அரசு அங்கீ காரம் அளித்திருக்கிறது. பால°தீன இயக்கத்தின் விடுதலை முகாமை இ°ரேல் விமானங்கள் டுனீஷியா நாட்டில் தாக்கின; அராபத்தைக் கொல்ல முயன்றது - நல்லவேளை அராபத் காப்பாற்றப்பட்டு விட்டார் - அந்த விடுதலை முகாம் அழிக்கப் பட்டது.
உடனடியாக இந்திய அரசு “இது மனித நாகரிக வளர்ச்சிக்கு விடப்பட்ட சவால். இதை இந்தியா கண்டிக்கிறது” என்று அழுத்தம் திருத்தமாக - ஆவேச மாக தன்னுடைய மனப்பாதிப்பை வெளியிடுகிறது.
நான் கேட்பதெல்லாம், மொராக் கோவில் போராடுகின்ற கொரில்லாக் களுக்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - பால°தீன விடுதலை இயக்கத்திற்கு தரப்படுகின்ற அங்கீகாரத்தை - இலங்கையிலே போராடுகின்ற தமிழர் களுக்கு ஏன் தரவில்லை? நாங்கள் தமிழனாகப் பிறந்ததைத் தவிர வேறு என்ன குற்றம் செய்தோம்?
தமிழனாகப் பிறந்தது குற்றமா? கேவலமா? அப்படியென்றால் தமிழ் நாட்டை இணைத்து ஆள்வது உங்களுக்குக் கேவலமல்லவா? அனுப்பி விடுங்களேன். வெளியே எங்களை என்று கேட்க மாட்டோமா? இப்படிக் கேட்பதால் கருணாநிதி பிரிவினைவாதம் பேசுகிறார் என்று காங்கிர° நண்பர்கள் சொல்வார்களே யானால் நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைக்கு பிரிவினைக் கொடியை - பிரிவினை கீதத்தை காஷ்மீரில் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் மத்தி யிலே உள்ள உள்துறை அமைச்சகத் திற்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் “காஷ்மீரில் நடைபெறுகின்ற ஷா அரசு (காங்கிர° எம்.எல்.ஏ.க்கள் துணையோடு நடை பெறுகின்ற அரசு) பிரிவினை வாதத் திற்கு துணை போகிறது; உதாரணம் தேவை என்றால், ஆக°டு 14 ஆம் நாள் பாகி°தான் சுதந்திரம் அடைந்த நாள்!
ஆக°டு 14 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்தில் 50 இடங்களில் பாகி°தான் கொடி ஏற்றப்பட்டது. பாகி°தான் சுதந்திரம் அடைந்ததை காஷ்மீரில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள். இது மாநிலத்தில் உள்ள ஷா அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று எழுதியுள்ளார். அப்படிப்பட்ட அரசை அங்கே முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தி பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அதை உருவாக்கியவர்கள் யார்?”
காங்கிர° எம்.எல்.ஏ.க்களும் மத்தியிலே உள்ள இந்திரா காங்கிர° தலைமையும்தான்.
இவர்களுக்கு பிரிவினையைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்ன யோக்கியதை இருக்கிறது?
காஷ்மீரில் பாகி°தான் கொடி ஏற்றுவதைத் தடுக்க வகையில்லை, வக்கு இல்லை; தெம்பில்லை; திராணியில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுபற்றி கவர்னர் மத்திய அரசுக்கு எழுதியிருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்கிக் கொண் டிருக்கிறது. எனவேதான் இவர் களுடைய தேசியம், வேறு யார் எதிர்த் தாலும் அங்கெல்லாம் விசுவரூபம் எடுக்காது.
இந்தப் பாவப்பட்ட தமிழன் இருக் கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன் னால் - அங்கே தான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத் திற்கு விரோதம் என்று காங்கிர° நண்பர்கள் சொல்வார்களேயானால், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற நானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ, பாடு படுவது ராஜ துரோகம் என்று சொன் னால், நாங்கள் அந்தக் குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நாங்கள் மாத்திரம் அல்ல - தமிழ்ச் சமுதாயமே தயாராயிருக்கிறது என் பதை தெரிவிக்கத்தான் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்படி அன்று ஒருமைப் பாட்டுக்கு தேசியத்துக்கு சவால்விட்ட கலைஞர், அதே உணர்வை இப்போது வெளிப்படுத்தும் சீமான்களை சிறை யில் அடைப்பது ஏன்? (கலைஞர் போர் முழக்கம் தொடரும்)
‘தமிழீழம் கிடைச்சுட்டா, நம்மளவா கதி என்னாகுமோ’
தமிழ்நாட்டு மக்கள் மீது சோனியா எல்லை மீறிய கோபம் கொண்டிருப்பதாக ஏடுகள் எழுதுகின்றன. விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க ‘வெஞ்சினம்’ பூண்டு செயல்படும் சோனியாவுக்கு தமிழ்நாட்டில் எழும் உணர்வுகளை சகிக்க முடியவில்லை போலிருக்கிறது. ‘ஜூனியர் விகடன்’ ஏடு இதை வெளிப்படுத்தியிருப்பதோடு தம்மை சந்திக்க வந்த மருத்துவர் இராமதாசிடமும் இதை சோனியா வெளிப்படுத்தியிருப்பதாக எழுதி யுள்ளது. அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மிக மோசமாக பார்ப்பன வெறியுடன் செயல்பட்ட போது மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி இடஒதுக்கீட்டில் உறுதியாக நின்றார். அதுபோல பொதுவிடங்களில் புகை பிடிக்க தடை சட்டம் கொண்டு வருவதிலும் உறுதியாக செயல்பட்டார். மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுமே, மத்திய அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தியவை என்று மருத்துவரிடம் கூறிய சோனியா, அப்போதெல்லாம் அன்புமணி பக்கம், மத்திய அரசு நின்றது என்று கூறி, அதேபோல் இலங்கைப் பிரச்சினையில் எங்களை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்று, எச்சரித்ததாக அந்த ஏடு கூறுகிறது.
மத்திய பார்ப்பன அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் திமிர் பிடித்த அறிக்கையைக் கண்டித்து, பா.ம.க., ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது - சோனியா, அவர்களைக் கடுமையாக முறைத்துப் பார்த்திருக்கிறார்.
“சோனியாவின் முகமூடி இப்போது கிழிந்து விட்டது. எங்களை முறைத்துப் பார்த்தபோது அவருடைய சுயமுகம் நன்றாகத் தெரிந்தது” என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாக அந்த ஏடு எழுதியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் போலீசார் தடியடிக்குப் பிறகு - தமிழக முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசிய சோனியா, தொடக்கத்திலேயே மாநில அரசு வழக்கறிஞருக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தால் இதைத் தடுத்திருக்க முடியும் என்று கண்டிப்பாகவே தொலைபேசியில் கூறியதாக - ‘ஜுனியர் விகடன்’ குறிப்பிட்டுள்ளது. மற்றொரு அதிர்ச்சியான தகவலையும் ‘சூசகமாக’ வெளியிட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற முறையில் ரகசியமாக ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய தோடு, தேவைப்பட்டால், வெளிப்படையாகவும் களம் இறங்கத் தயார் என்று சோனியா சிங்களத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாராம். சோனியாவே - வெளிநாட்டுத் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு - ஈழத் தமிழர்களுக்கு உதவிட வேண்டாம் என்று பேசி வருவதால்தான், உலகம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்த செய்தி கூறுகிறது.
தன்மானமுள்ள தமிழருவி மணியன்
காங்கிரசின் துரோகத்தை எதிர்த்து சீர்காழியில் இரவிச்சந்திரன் என்ற காங்கிரசுத் தமிழன் தீக்குளித்தான். உணர்வுள்ள காமராசர் வழி வந்த காங்கிரசுத் தமிழர்களால் இந்த பார்ப்பனிய துரோகங்களை சகிக்க முடியவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாகத் திகழ்கிறவர், தமிழருவி மணியன். காங்கிர° கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளரான அவர் மதுரையில் செய்தியாளர் களிடம் தனது தமிழின உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டார்.
வெடிகுண்டு களால் நாள்தோறும் கொத்துக்கொத்தாய் தமிழினம் அழிந்துக் கொண்டிருக்கும் சூழலில், சோனியாகாந்தி ஈழத் தமிழரின் நிலை குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை. இவருடைய தலைமையில் இயங்கும் காகித நியமன காங்கிரசில், என் மொழி, இன அடையாளங்களை அடகு வைக்க என் இதயம் இடம் தரவில்லை. எனவே நான் இன்று முதல், அகில இந்திய காங்கிர° குழு உறுப்பினர், மாநிலப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விடுபடுகிறேன்” - என்று அறிவித்துள்ளார்.
சோ - சு.சாமி
சு. சாமிக்கு முட்டை அடி கிடைத்தவுடன், அவரது இல்லம் நோக்கி, ஓடோடி ஆறுதல் கூறச் சென்றவர் துக்ளக் சோ பார்ப்பனர். ‘நேரா முகத்தை நோக்கி முட்டையை வீசுகிறான் பாருங்கோ; பெரியார் காலத்துல கூட பேசிண்டுதான் இருந்தா; இப்போதுதான், இப்படி எல்லாம் நடக்குது; இப்பவே இந்த நிலையின்னா, ‘தமிழ் ஈழம்’ கிடைச் சுட்டதுன்னா நம்மளவா கதி என்னவாகுமோ” என்று சோவும், சுப்ரமணிய சாமியும் தங்கள் உணர்வு களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘நக்கீரன்’ ஏடு - இந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளது. . by my mail
Kuttipoison

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in